வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோவின் அதிரடி முடிவால் அவரது கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதிரடி பேட்டிங், அட்டகாசமான ஃபீல்டிங், அசத்தலான பவுலிங் என ஒரு முழுமையான மற்றும் தரமான ஆல்ரவுண்டராக கிரிக்கெட் உலகில் வலம்வந்தார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2,200 ரன்களை குவித்துள்ள பிராவோ, 86 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2004ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பிராவோ, 2010ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடவில்லை. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 164 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2,968 ரன்களை குவித்துள்ள பிராவோ, 199 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிராவோ அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடினாலும், டி20 போட்டியில்தான் மிகச்சிறந்த வீரராக திகழ்கிறார். ஒருநாள் போட்டியை பொறுத்தமட்டில் கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஆடியதுதான் அவரது கடைசி ஒருநாள் போட்டி. அதன்பிறகு ஒருநாள் போட்டிகளில் பிராவோ ஆடவில்லை. தற்போது இந்தியாவுக்கு எதிராக ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் பிராவோ இல்லை. 

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது ஓய்வை அறிவித்த பிராவோ, தனது குடும்பம், ரசிகர்கள் மற்றும் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிராவோ ஓய்வு பெற்றாலும், ஐபிஎல், பிபிஎல், சிபிஎல் போன்ற பல நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சென்னை அணியின் நிரந்தரமான வீரராக பிராவோ திகழ்கிறார். சிஎஸ்கே அணிக்கு பிராவோவின் பங்களிப்பு அளப்பரியது. சர்வதேச கிரிக்கெட்டில் பிராவோ ஆடுவதை பார்க்க முடியாவிட்டாலும் டி20 லீக் தொடர்களில் பிராவோ தொடர்ந்து ஆடுவதை பார்க்கலாம்.