கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள் விளாசி மிரட்டியுள்ளார் டுவைன் பிராவோ.

வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடந்துவருகிறது. இதில் டுவைன் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயிண்ட் கிட்ஸ்&நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள் விளாசினார் பிராவோ.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தது. இதையடுத்து 200 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய செயிண்ட் கிட்ஸ் அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்ததால், பிராவோவின் நைட் ரைடர்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் பிராவோ அதிரடியாக ஆடி மிரட்டினார். நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தபோது, 19வது ஓவரை ஜோசப் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் பிராவோ ரன் அடிக்கவில்லை. அதற்கு அடுத்த 5 பந்துகளையும் சிக்ஸர் விளாசினார். முதல் பந்தை தவிர்த்து மற்ற 5 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்ஸருக்கு விரட்டி மிரட்டினார் பிராவோ. 11 பந்துகளில் 37 ரன்களை குவித்தார் பிராவோ.  

இந்த போட்டியில் பிராவோ அணியின் எதிரணி கேப்டனோ அதிரடி மன்னன் கெய்ல். பிராவோவின் அடியை பார்த்து கெய்லே மிரண்டு போனார். முதல் பந்தில் மட்டும் சிக்ஸர் அடித்திருந்தால், ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் ஆகியிருக்கும். யுவராஜ் சிங் கடந்த 2007ல் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். யுவராஜ் சிங் அடித்தது, சர்வதேச போட்டி. ஒருவேளை பிராவோ இந்த போட்டியில் 6 சிக்ஸர்கள் அடித்திருந்தாலும், இது சர்வதேச போட்டி இல்லையென்றாலும் கூட, பெரிய விஷயமாக அமைந்திருக்கும். ஆனால் 5 சிக்ஸர்கள் மட்டுமே விளாசினார். இதுவும் சாதாரண விஷயமல்ல.