ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அந்த அணி கருதும் கிறிஸ் லின்னின் பலவீனத்தை தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே ஸ்மித்தும் வார்னரும் இல்லாமல் தவித்துவருகிறது. ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இரு நட்சத்திர வீரர்களும் இல்லாததால் தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. சொந்த மண்ணிலேயே மண்ணை கவ்விவருகிறது ஆஸ்திரேலிய அணி. உலக கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அந்த அணியில் நிலை பரிதாபகரமாக உள்ளது. 

அனைத்து அணிகளும் உலக கோப்பைக்கு தீவிரமாக தயாராகிவரும் நிலையில், தொடர் தோல்விகளிலிருந்து மீளும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த தென்னாப்பிரிக்கா 2-1 என தொடரை வென்றது. 

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கிறிஸ் லின் வெவ்வேறு வரிசையில் களமிறக்கப்பட்டார். டி20 போட்டிகளில் தன்னை நிரூபித்துள்ள லின், 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அதிலும் பெரிதாக சோபிக்கவில்லை. ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சில முக்கியமான இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். எனினும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிதாக ஆடவில்லை. டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் அந்த அணியின் அதிரடி வீரராக அறியப்படும் கிறிஸ் லின்னின் பலவீனத்தை தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் அம்பலப்படுத்தியுள்ளார். 

உலக கோப்பையில் கிறிஸ் லின் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக இருப்பார் என்று அந்த அணியின் கேப்டன் ஃபின்ச் தெரிவித்திருந்த நிலையில், லின்னின் பலவீனத்தை அம்பலப்படுத்தி அந்த அணியின் நம்பிக்கையை அசைத்து பார்த்திருக்கிறார் டுபிளெசிஸ். 

லின் குறித்து பேசிய டுபிளெசிஸ், அதிகபட்சம் 130 கிமீ வேகம் வரை பந்துகள் வீசப்படும்போது மட்டையை சுழற்றி அடித்து ஆடுகிறார். ஆனால் அதைவிட வேகமாக வீசும்போது அவரால் சவுகரியமாக ஆட முடியவில்லை, சுதந்திரமாக கைகளை வீசமுடியவில்லை. அதுவும் எங்கள் அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் அவரால் எங்களிடம் சரியாக ஆடமுடியவில்லை என்று கூறியுள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலுமே வேகப்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் கிறிஸ் லின். தென்னாப்பிரிக்காவிடம் டேல் ஸ்டெயின், ரபாடா, நிகிடி ஆகிய சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். உலக கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தென்னாப்பிரிக்க கேப்டனின் கணிப்பை பொய்யாக்குவாரா லின் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.