ஐபிஎல் போட்டிகளிலும் இந்த ஆண்டு முதல் டி.ஆர்.எஸ் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. தோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் களமிறங்குவதால், சென்னை அணியின் ரசிகர்களும் தோனியின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான முன்னாள் சாம்பியன் சென்னை அணியும் மோதுகின்றன.

இந்த சீசனில் இரண்டு அணிகளுக்கு தமிழக வீரர்கள் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கும் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். இதுவரை தோனியின் கேப்டன்சியின் கீழ் ஆடிவந்த அஸ்வின், இந்தமுறை தோனியை எதிர்த்து விளையாடுகிறார். அதுவும் கேப்டனாக.. அதனால் இந்த ஐபிஎல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் நெருங்கிவரும் நிலையில், இந்த சீசனில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்பட உள்ளதாக ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சுக்லா, டிஆர்எஸ் முறையை ஐபிஎல் தொடரில் கொண்டுவருவது குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆலோசித்து வந்தோம். தற்போது இந்த சீசனில் இருந்து பயன்படுத்துகிறோம். சர்வதேச போட்டிகளை போன்று ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்ஸில் ஒரு முறை டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.