dravid has believe in hardik pandya

தென் ஆப்பிரிக்க அணியை ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது பந்துவீச்சின் மூலம் மிரட்டுவார் என ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மீண்டும் இலங்கை என தொடர்ச்சியாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று இந்திய அணி மிரட்டி வருகிறது.

இதையடுத்து தென் ஆப்பிரிக்காவிற்கு சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாட உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. கோலி தலைமையிலான இந்த அணி, கண்டிப்பாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைக்கும் என முன்னாள் ஜாம்பவான்கள் அனைவரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள், பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவே இருக்கும். அதிலும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டலாக பந்துவீசுவார்கள் என்பதால் அது இந்திய அணிக்கு கூடுதல் சவாலாகவே இருக்கும். எனினும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால், வெற்றிக்கனியை இந்திய அணி பறிக்கும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க தொடர் தொடர்பாக பேசிய ராகுல் டிராவிட், தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். பேட்ஸ்மேன்களுக்கு கண்டிப்பாக சவாலாகவே இருக்கும். இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க வீரர்களை கண்டிப்பாக மிரட்டுவார். பந்துவீச்சில் மிரட்டும் திறன் அவரிடம் உள்ளது என டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.