பயிற்சியில் பங்கேற்காமல் குடிபோதையில் மயங்கிக் கிடந்தததால், நியூஸிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியிலிருந்து இந்திய இளம் வீரர் சுமித் நாகல் நீக்கப்பட்டுள்ளார்.
ஆசியா / ஓசியானியா குரூப்-1 பிரிவில் இந்தியா - நியூஸிலாந்து இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி வரும் பிப்ரவரி 3-5 வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
இப்போட்டிக்கான 6 பேர் கொண்ட இந்திய அணியிலிருந்து 19 வயது இளம் வீரர் சுமித் நாகல் நீக்கப்பட்டுள்ளார்.
பயிற்சியில் பங்கேற்காமல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் தான் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஏஐடிஏ வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
“கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொரியாவுக்கு எதிரான போட்டி சண்டீகரில் நடைபெற்றது. இப்போட்டிக்கு முன்னதான பயிற்சிகளுக்கு வராமல் சுமித் நாகல் புறக்கணித்தார். பின்னர், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு சென்று பார்த்தபோது, குடிபோதையில் மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.
மேலும், 2015-ஆம் ஆண்டில் விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். போட்டிக்குப் பின்னர், நாடு திரும்புகையில், அணி நிர்வாகத்திடம் அனுமதி பெறமால் தனது பெண் தோழியை சுமித் நாகல் தில்லிக்கு அழைத்து வந்தார்.
எனவே, தொடர்ந்து ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் அவருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே தற்போது அணியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
திறமையான இளம் வீரரான சுமித் நாகல், தனது தவறுகளை திருத்திக் கொள்ளும் பட்சத்தில் அணியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்” என்று தெரிவித்தன.
