சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர். இவர்களில் ஜோ ரூட்டை தவிர மற்ற மூவரும் அனைத்து விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடிவருகிறார்கள். ஜோ ரூட் டி20 போட்டிகளில் மட்டும் ஆடுவதில்லை. 

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்திலும் கேன் வில்லியம்சன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்து அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் கேன் வில்லியம்சன். ஒரு வீரராகவும் கேப்டனாகவும் சிறப்பான பங்களிப்பை செய்து அணியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் வில்லியம்சன், கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் தனது போட்டியாளர்களான விராட் கோலி, ரூட், ஸ்மித் ஆகியோரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பும் ஷாட்கள் குறித்து பேசினார். அதிலிருந்தே அவரது ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிப்பை அறிந்துகொள்ள முடியும். தனக்கு கடும் போட்டியாளர்களாக திகழும் வீரர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். 

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் கேன் வில்லியம்சனுக்கு மிகவும் பிடித்த வீரர்களில் பெரும்பாலானோர் இந்திய வீரர்கள். அதிலும் சச்சின் டெண்டுல்கரை மிகவும் பிடிக்குமாம். சிறு வயது முதலே சச்சின் டெண்டுல்கரின் மிகத்தீவிர ரசிகரான வில்லியம்சன், இந்தியாவுக்கு எதிரான போட்டியில்தான் அறிமுகமானார். 2010ம் ஆண்டு அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் வில்லியம்சன் அறிமுகமானார். அந்த தொடரில் ஆடிய சச்சின், டிராவிட், லட்சுமணன் ஆகிய வீரர்களை வில்லியம்சனுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான வில்லியம்சன், அந்த போட்டி உட்பட அந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் டெண்டுல்கரின் செயல்பாடுகளை களத்தில் ரசித்து கொண்டேயிருந்திருக்கிறார். தனது ரோல் மாடலான சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக களத்தில் ஆடுவதை நினைத்து வியந்திருக்கிறார் வில்லியம்சன். சச்சினை மட்டுமல்லாமல் டிராவிட், லட்சுமணன் ஆகியோரையும் வில்லியம்சனுக்கு மிகவும் பிடிக்கும்.