Do not worry about Rahane absence - Full Support Ganguly
இந்திய வீரர் அஜிங்க்ய ரஹானே ஃபார்மில் இல்லாதது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. அவர் மீண்டு வருவார் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற ரஹானே, ஐந்து இன்னிங்ஸ்களில் மொத்தமாக 17 ஓட்டங்களே எடுத்திருந்தார். எனினும், அந்நிய மண்ணில் நடைபெறும் போட்டிகளில் அவரின் சிறப்பான ஆட்டத்தின் அடிப்படையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில், "பிடிஐ'-க்கு நேற்று சௌரவ் கங்குலி பேட்டியளித்தார். அதில், "ரஹானே மிகச் சிறந்த வீரராவார். எனவே, அவர் மீண்டு வர வாய்ப்புள்ளதால் தற்போது அவர் ஃபார்மில் இல்லாதது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை.
விராட் கோலி, ரஹானே, புஜாரா, முரளி விஜய் ஆகியோர் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்காவில் விளையாடியுள்ளன நிலையில், அவர்கள் தற்போது கூடுதல் அனுபவத்துடன் தென் ஆப்பிரிக்க தொடரில் மீண்டும் கலந்து கொள்கின்றனர்.
ரோஹித் சர்மாவுக்கு சமீபத்தில் கிடைத்த இரண்டு வாய்ப்புகளையும் அவர் மிகச் சரியாக பயன்படுத்தியுள்ளார்.
நமது அணியின் பந்துவீச்சு வரிசையானது திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. எனினும், அதை உறுதி செய்ய அவர்கள் களமாடும் வரையில் பொறுத்திருக்க வேண்டும். அங்குள்ள ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்கும். அந்த வகையில் இந்திய அணியில் உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் "ஃப்ளாட் டிராக்'-ஆக இருக்கும் பட்சத்தில், பிளேயிங் லெவனில் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் இருக்க வேண்டும். ஆடுகளம் புல்தரையுடன் இருந்தால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருக்க வேண்டும்.
தொடக்க வீரர்களாக ஷிகர் தவன் - முரளி விஜய் கூட்டணி களமிறங்கலாம்" என்று அவர் அறிவுரையும் வழங்கினார்.
