சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து இந்தியா பின்வாங்குவது, ஐசிசியின் புதிய வருமானப் பகிர்வு முறை தொடர்பாக எந்தவொரு முடிவையும் ஒருசில உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப பிசிசிஐ எடுக்கக் கூடாது என்று வினோத் ராய் கூறியுள்ளார்.

பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவரான வினோத் ராய் வெளியிட்ட அறிக்கை:

“ஐசிசியின் புதிய வருமானப் பகிர்வு முறை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்பது போன்ற விவகாரங்கள் தொடர்பாக முடிவுகள் மேற்கொள்ள சில பிசிசிஐ அதிகாரிகள் காணொலிக் காட்சியில் கலந்தாலோசனையில் ஈடுபட்டுள்ளது எங்களது கவனத்துக்கு வந்துள்ளது.

இதனையடுத்து, பிசிசிஐயின் சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தின்போது, ஐசிசியின் புதிய வருமானப் பகிர்வு முறை தொடர்பாக எந்தவொரு முடிவும் மேற்கொள்ளக் கூடாது எனவும், சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து இந்தியா பின்வாங்குவது தொடர்பாக எங்களின் அனுமதி இல்லாமல் ஐசிசிக்கு எந்தவொரு நோட்டீஸும் அனுப்பக் கூடாது என்றும் பிசிசிஐக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இத்தகைய முடிவை அவசரமாக மேற்கொள்ளக் கூடாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து இந்தியா பின்வாங்கினால், அடுத்த 8 ஆண்டுகளுக்கு ஐசிசியின் போட்டிகளில் இந்திய அணியால் பங்கேற்க இயலாது.

எனவே, ஒருசில உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப முடிவுகள் மேற்கொள்ளப்படக் கூடாது.

ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து இந்தியா பின்வாங்குவது என முடிவெடுத்தால், பிசிசிஐ சிறப்புக் குழுவின்போது ஒட்டுமொத்த 30 உறுப்பினர்களும் அதற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.