ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. இதற்கான ஏலம் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. 

இந்த ஐபிஎல்-லில் இரண்டு அணிகளுக்கு தமிழக வீரர்கள் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கும் கேப்டன்களாக செயல்பட உள்ளனர்.

நீண்ட நாட்களாக இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்து வந்த தினேஷ் கார்த்திக், அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து, இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். அந்த ஒரே இரவில், தினேஷ் கார்த்திக்கின் நிலையே மாறிவிட்டது எனலாம். அதுவரை தினேஷை கண்டுகொள்ளாதவர்கள் கூட வியந்து பார்த்தார்கள்.

தினேஷ் கார்த்திக்கை தோனியுடன் ஒப்பிட்டும் பேச்சுகள் எழ தொடங்கின. போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பதற்கு பெயர்போன தோனியுடன் தினேஷ் கார்த்திக்கை ஒப்பிட்டு கருத்துகள் வலம்வந்தன. 

தோனியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என தினேஷ் கார்த்திக்கே கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐபிஎல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத், சிறந்த வீரர்களை அணியில் கொண்டிருக்கும் சென்னை அல்லது கொல்கத்தா ஆகிய இரு அணிகளில் ஒன்றே ஐபிஎல் கோப்பையை இந்த முறை வெல்லும் என தெரிவித்தார்.

மேலும் தோனியுடன் தினேஷ் கார்த்திக்கை ஒப்பிட வேண்டாம். தோனி கிரிக்கெட் உலகின் ஜாம்பவான். அவருடன் தினேஷை ஒப்பிடுவது சரியாக இருக்காது. வங்கதேசத்திற்கு எதிரான அவரது ஆட்டம், அவருக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருக்கும் என பத்ரிநாத் தெரிவித்தார்.