நீண்ட நெடிய அனுபவம் கொண்ட தினேஷ் கார்த்திக்கின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளது தேர்வுக்குழு.

2004ம் ஆண்டே இந்திய அணியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக், அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார். இந்திய அணியில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் வெறும் 91 ஒருநாள் போட்டிகளிலும் 26 டெஸ்ட் போட்டிகளிலும் மட்டுமே ஆடியுள்ளார். அவ்வப்போது அணியில் சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதுமாகவே இருந்தார். அவரும் தொடர்ச்சியாக இந்திய அணியில் தனக்கான இடத்திற்காக காத்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.

தனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தேடிக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக், கடந்த  ஆண்டு நடந்த நிதாஹஸ் டிராபி டி20 தொடரின் இறுதி போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணியை திரில் வெற்றி பெற செய்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக டி20 அணியில் தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டார்.

உலக கோப்பையை மனதில் வைத்து இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் தினேஷ் கார்த்திக்கிற்கும் அணியில் இடமளிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக், அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நன்றாக ஆடினார். பெரிய இன்னிங்ஸை ஆட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் நன்றாகவே ஆடினார். குறிப்பாக போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்கும் ஃபினிஷர் வேலையை நன்றாக செய்தார். ஆனாலும் ரிஷப் பண்ட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் அணியில் எடுக்கப்பட்டிருப்பதால் தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலிய தொடரில் புறக்கணிக்கப்பட்டுள்ளார். 

தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் அறிமுகமானதிலிருந்து அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டதேயில்லை. அவ்வப்போது வாய்ப்புகள் வழங்கப்படுவதும் பின்னர் நீக்கப்படுவதுமாகவே இருந்தார். ஆனாலும் அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்காத மனவேதனை அவருக்கு இருந்தாலும், அதையெல்லாம் கடந்து கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவிற்கு ஆடியுள்ளார். 

ஒருநாள் அணியில்தான் இடம் கிடைக்கவில்லை என்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி ஓய்வு பெற்ற பிறகு அந்த இடம் சஹாவிற்கு சென்றுவிட்டது. தற்போது அதையும் ரிஷப் பண்ட் பிடித்துவிட்டார். தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் அண்மைக்காலமாக மேம்பட்டிருக்கிறது. இப்போதாவது தோனிக்கு பிறகு அந்த இடம் கிடைக்கும் என்று நினைத்திருப்பார். ஆனால் தற்போது அந்த இடம் ரிஷப் பண்ட்டிற்கு என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதால், அதுவும் போய்விட்டது. 

15 ஆண்டுகளாக இந்திய அணியில் ஆடிவரும் தினேஷ் கார்த்திக்கிற்கு நிரந்தர இடம் கிடைக்காதது ஒருபுறமிருக்க, உலக கோப்பை அணியிலும் புறக்கணிக்கப்படுவதற்கான வாய்ப்பே உள்ளது. தோனி முதன்மை விக்கெட் கீப்பராக இருக்கும் நிலையில், மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

ஒருவேளை ராகுல் சரியாக ஆடாவிட்டால், அவரை உலக கோப்பை அணியில் நீக்கிவிட்டு, ரிஷப் பண்ட்டை மாற்று தொடக்க வீரராக்கிவிட்டு, ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை சேர்க்கலாம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ராகுல் - ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக் தான் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கரின் பார்வையில் சிறந்த மாற்று தொடக்க வீரராக இருக்கிறார். தினேஷ் கார்த்திக்கிற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை பார்ப்போம்.