இந்திய அணிக்கு 3 விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. எந்த சூழலிலும் பதற்றம் அடையாமல், முகத்தில் எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் சூழலை கூலாக அணுகுபவர் தோனி. இக்கட்டான சூழல்களிலும் போட்டி கைமீறி போகும் நேரங்களிலும் தானும் பதற்றப்பட்டு வீரர்களையும் பதற்றப்படுத்த மாட்டார். எப்படியான சூழலிலும் பவுலர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கும் கேப்டனாக திகழ்ந்தார் தோனி. 

தோனி கேப்டன்சியில் இருந்து விலகியபிறகு கேப்டனாக பொறுப்பேற்ற கோலி, தோனிக்கு அப்படியே நேர்மாறானவர். களத்தில் எப்போதுமே ஆக்ரோஷமாக இருப்பவர் கோலி. கோலியின் கேப்டன்சியின் மீது விமர்சனங்கள் உள்ளன. பவுலிங் சுழற்சி, வீரர்களை கையாளும் விதம், கள வியூகம் ஆகியவற்றில் விராட் கோலியின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் எல்லாம் தற்போது தேறிவருகிறார் கோலி. 

விராட் கோலி இல்லாத நேரங்களில் தற்காலிக கேப்டனாக செயல்படும் ரோஹித் சர்மா, தனது அபாரமான கேப்டன்சியால் அனைவரையும் கவர்ந்துள்ளார். களத்தில் அவரது அணுகுமுறை, கள வியூகம், பவுலிங் சுழற்சி ஆகியவற்றில் கைதேர்ந்தவர் ரோஹித் சர்மா. 

இவ்வாறு தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகிய மூவருமே வெவ்வேறான அணுகுமுறைகளை கொண்ட கேப்டன்கள். இவர்கள் மூவரின் கேப்டன்சியிலும் ஆடியுள்ள தினேஷ் கார்த்திக், மூவரின் கேப்டன்சி குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். 

மூவரின் கேப்டன்சி குறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், தோனி களத்தில் அவரது உள்ளுணர்வின் படி செயல்படுவார். அவரது திடீரென தோன்றும் விஷயங்களை களத்தில் செயல்படுத்துவார். அது நல்ல முடிவுகளையும் கொடுக்கும். கோலியை பொறுத்தமட்டில் மிகவும் ஆக்ரோஷமானவர். மிகுந்த தன்னம்பிக்கை வாய்ந்த கோலி, பேட்டிங்கிலும் சரி கேப்டனாகவும் சரி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். 

இவர்கள் இருவரிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவர் ரோஹித் சர்மா. ரோஹித் முறையான திட்டமிடல்களுடன் களத்திற்கு செல்வார். பவுலர்களுக்கு மட்டுமல்லாது பேட்ஸ்மேன்களுக்கும் ஆலோசனைகளை வழங்கி உத்வேகப்படுத்துவார். அவரது செயல்பாட்டில் உறுதியான கேப்டன் ரோஹித் சர்மா என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.