தோனிக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால், நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் ஆடிய தினேஷ் கார்த்திக், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அபாரமாக ஆடினார். 

இந்திய அணியின் மிடில் ஆர்டரை பொறுத்தமட்டில் நான்காமிடத்தில் ராயுடு, ஐந்தாமிடத்தில் தோனி என 4 மற்றும் 5ம் வரிசைகள் உறுதிப்படுத்தப்பட்டு விட்டன. 6ம் வரிசையில் கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யார் வேண்டுமானாலும் அணியில் எடுக்கப்படலாம் என்ற நிலைதான் உள்ளது. 

நியூசிலாந்துக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்படவில்லை. தோனிக்கு தொடையில் ஏற்பட்ட காயத்தால், இன்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் ஆடவில்லை. எனவே தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டார். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆடும் லெவனில் இடம்பெறுவதற்கு ஆரோக்கியமான போட்டி நிலவிவரும் நிலையில், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆடினார் தினேஷ் கார்த்திக். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 243 ரன்கள் அடித்தது. 244 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் டாப் 3 வீரர்களான தவான், ரோஹித், கோலி ஆகிய மூவரும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்தனர். 

தொடக்கம் முதலே அடித்து ஆடிய தவான், 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் அடித்த நிலையில், டிரெண்ட் போல்ட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ரோஹித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த ரோஹித் சர்மா, 62 ரன்களில் சாண்ட்னெரின் பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து அரைசதம் அடித்த கேப்டன் கோலியும் 60 ரன்களில் போல்ட்டிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். 

ரோஹித், கோலியின் விக்கெட்டுக்கு பிறகு அவர்கள் விட்டுச்சென்ற பணியை ராயுடுவும் தினேஷ் கார்த்திக்கும் இணைந்து செவ்வனே செய்தனர். ராயுடு - தினேஷ் கார்த்திக் ஜோடி, நியூசிலாந்து பவுலர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினர். இருவருமே பவுண்டரிகளை விளாசினர். களத்திற்கு வந்த சில நிமிடங்கள் நிதானமாக நின்ற தினேஷ் கார்த்திக், கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினார். இஷ் சோதி வீசிய 43வது ஓவரில் ஒரு சிக்ஸரையும் ஒரு பவுண்டரியையும் விளாசினார். இதையடுத்து அடுத்த ஓவரில் வைடு போட்டு பிரேஸ்வெல் பவுண்டரி கொடுத்ததை அடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. 

நிதாஹஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தானும் ஒரு சிறந்த ஃபினிஷர் தான் என்று நிரூபித்த தினேஷ் கார்த்திக், இந்த போட்டியிலும் சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து கெத்தாக அணியை வெற்றி பெற செய்தார். 

கடந்த ஓராண்டாக ஃபார்மில் இல்லாமல் தவித்த தோனி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அபாரமாக ஆடி, தான் இன்னும் சிறந்த ஃபினிஷர் தான் என்று நிரூபித்த நிலையில், தோனி இல்லாத குறையை இந்த போட்டியில் நீக்கி, தானும் ஒரு சிறந்த ஃபினிஷர் தான் என்று தினேஷ் கார்த்திக் நிரூபித்துள்ளார்.