வங்கதேச அணி தங்கள் நிலையிலிருந்து பல தூரம் கடந்து வந்திருந்தாலும் அந்த அணியிடம் தோல்வியடைந்தால் இந்திய அணிக்கு அது தர்மசங்கடம்தான் என தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இலங்கை முத்தரப்பு டி20 தொடரின் இறுதி போட்டி கொழும்புவில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்தியா-வங்கதேச அணிகள் இறுதி போட்டியில் மோதுகின்றன.

இந்நிலையில், இந்த போட்டி குறித்து பேசிய இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவின் முதல் தர அணியானாலும் சரி, 2ம் நிலை அணியானாலும் சரி, வங்கதேசத்துடன் ஆடினால் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றுவிட்டால், ஓகே வங்கதேசத்தை வென்றுவிட்டீர்கள் என்பார்கள். அதே தோற்றுவிட்டால், வங்கதேசத்திடம் போய் தோல்வியடைந்திருக்கிறீர்கள். என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று தொனியை மாற்றி கேட்பார்கள்.

சில முன்னணி வீரர்கள் இல்லை என்றாலும் கடந்த ஓராண்டாக அவர்கள் இருந்த போது எப்படி ஆடினாமோ, அப்படியே ஆடுவோம்.. அது எந்த அணியாக இருந்தாலும் சரி, சிறப்பாக விளையாட வேண்டும் என்றே ரோஹித் வலியுறுத்துகிறார்.

துணைக்கண்ட சூழலில் வங்கதேசம் நல்ல அணி. விடாபிடியானவர்கள் என்பதற்கு பெயர் பெற்றவர்கள். வெற்றி பெற கடினமாக முயற்சி செய்வார்கள். வங்கதேச அணியின் வளர்ச்சி சிறப்பானது. ஆனாலும் வங்கதேசம் போன்ற அணிகளிடம் தோற்பதை இந்திய ரசிகர்கள் விரும்புவதில்லை என ரசிகர்களின் எண்ணத்தை தினேஷ் கார்த்திக் பிரதிபலித்தார்.