ஷ்ரேயாஸ் ஐயரை திட்டமிட்டு அவுட்டாக்கியதாக கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 11வது சீசனின் 13வது போட்டியில் டெல்லி அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் காம்பீர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி வீரர் நிதிஷ் ராணாவின் அரைசதம், ரசலின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 200 ரன்கள் குவித்தது. 

201 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில், மேக்ஸ்வெல் மற்றும் ரிஷப் பண்ட்டைத் தவிர மற்ற வீரர்கள் யாருமே சொல்லும்படி ஆடவில்லை. இதனால் அந்த அணி 15வது ஓவரிலேயே வெறும் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக நிதிஷ் ராணா தேர்வு செய்யப்பட்டார்.

போட்டிக்கு பிறகு பேசிய தினேஷ் கார்த்திக், ஷ்ரேயாஸ் ஐயரை திட்டமிட்டு அவுட்டாக்கினோம். நிதிஷ் ராணா பிடித்த கேட்ச் அற்புதமானது. அணியின் வியூகங்கள் சிறப்பாக கைகொடுத்தன. ஐபிஎல்லில் ரிஸ்ட் ஸ்பின்னர்களின் பங்களிப்பு அளப்பரியது. எங்கள் அணியின் திறமை வாய்ந்த மூன்று ஸ்பின்னர்கள் உள்ளனர். கேப்டன்சியையும் பேட்டிங்கையும் பிரித்தறிந்து செயல்படுவதுதான் சிறந்தது என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.