தியோதர் டிராபி தொடரில் இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கும் அஷ்வினும் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினர்.

தியோதர் டிராபி தொடரின் முதல் போட்டி இந்தியா ஏ மற்றும் இந்தியா பி ஆகிய அணிகளுக்கு இடையே டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்துவருகிறது. 

தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி ஆகிய அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி டெல்லியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி அணி, ஹனுமா விஹாரியின் அருமையான பேட்டிங்கால்(87 ரன்கள்) 261 ரன்களை எடுத்துள்ளது. 

262 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணியின் பிரித்வி ஷா மற்றும் கருண் நாயர் ஆகிய இருவரும் மூன்றாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 7 ரன்களிலும் கருண் நாயர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 

அன்மோல்பிரீத் சிங்(7), அங்கித் பாவ்னே(3), குருணல் பாண்டியா(17) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறியதால் 87 ரன்களுக்கே இந்தியா ஏ அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் தினேஷ் கார்த்திக் களத்தில் நிலைத்து நின்று பொறுப்பாக ஆடினார். 

5 விக்கெட்டுக்கு பிறகு தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தமிழக வீரரான அஷ்வின், அவருக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல், அதேநேரத்தில் சீராக ரன்களையும் குவித்தனர். 

இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட தினேஷ் கார்த்திக், அஷ்வின் ஆகிய இருவருமே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆடினர். அரைசதம் கடந்த அஷ்வின் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 127 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கிய தினேஷ் கார்த்திக், 99 ரன்களில் நதீமின் பவுலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.