Dindigul college champion wins Anna University Women Basketball Tournament
அண்ணா பல்கலைக்கழக அளவிலான மகளிருக்கான கூடைப்பந்துப் போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி அணி பட்டம் வென்றது.
அண்ணா பல்கலைக்கழக அளவிலான மகளிருக்கான கூடைப்பந்துப் போட்டி கோயம்புத்தூர், குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் நடைப்பெற்றது.
இதில், சென்னை செயின்ட் ஜோசப், சத்தியபாமா, ஜேப்பியார், சிவகாசி மெப்கோ, ஈரோடு பில்டர்ஸ், நாமக்கல் பாவை, கோவை சி.ஐ.டி., இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 12 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன.
இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை செயின்ட் ஜோசப், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி அணிகள் மோதின.
இதில் 67-53 என்ற புள்ளிகள் கணக்கில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி அணி வெற்றி பெற்றது.
மூன்றாவது இடத்தை ஜேப்பியார் கல்லூரியும், 4-வது இடத்தை நாமக்கல் பாவை பொறியியல் கல்லூரி அணியும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வர் ஜே.ஜேனட் பரிசுக் கோப்பை, சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்த விழாவில் விளையாட்டுத் துறை இயக்குநர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
