ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் பந்தில் இலங்கை வீரர் டிக்வெல்லா அபாரமான ஒரு ஷாட்டை அடித்தார். 

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. இதில் முதல் போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் அந்த அணியின் விக்கெட் கீப்பரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான டிக்வெல்லாவை தவிர மற்ற எந்த வீரருமே சோபிக்கவில்லை. 

தொடக்கம் முதலே விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்துவந்தது இலங்கை அணி. டிக்வெல்லா மட்டுமே களத்தில் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். 64 ரன்கள் அடித்து அவரும் பாட் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டமான நேற்றே, வெறும் 57 ஓவர்கள் மட்டுமே ஆடி 144 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸை இழந்தது இலங்கை அணி. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 82 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட போதிலும் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான லாபஸ்சாக்னே மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடிவருகின்றனர். 

இலங்கை அணியின் இன்னிங்ஸின்போது, ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் டிக்வெல்லா மட்டும் நிலைத்து ஆடினார். விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்து டெயிலெண்டர்ஸ் பேட்டிங் ஆட வந்ததும், அடித்து ஆடி முடிந்தவரை ரன்களை சேர்த்தார் டிக்வெல்லா. அப்போது, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் பந்தில் ஸ்கூப் ஷாட்டின் மூலம் விக்கெட் கீப்பருக்கு ஒரு சிக்ஸர் அடித்தார். மிட்செல் ஸ்டார்க் போன்ற பவுலரின் பந்துவீச்சில் இப்படியொரு ஷாட்டை அடிப்பது எளிதானது அல்ல. டி20 போட்டிகளில் அடிப்பது போன்று அசால்ட்டாக அடித்துவிட்டார். அந்த வீடியோ இதோ..