தோனியை புணே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தூக்கியதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இனி புணே அணியை எங்களுடைய பஞ்சாப் அணி எளிதாக வீழ்த்த முடியும் என்று சேவாக் சொன்னார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான சேவாக் கணித்துள்ளார்.

ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடரை பற்றி இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான சேவாக் கூறியிருப்பதாவது:

“தற்போதைய இந்திய அணி மிகச்சிறந்த அணியாக உள்ளது. தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுடன் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் உள்ளனர்.

தற்போதைய இந்திய அணி வெளிநாட்டு மண்ணிலும் டெஸ்ட் தொடரை வெல்லும் தகுதி வாய்ந்ததாகும்.

இந்திய அணி மிக அற்புதமாக ஆடி வருகிறது. கடைசியாக விளையாடிய 9 தொடர்களில் 8-ஐ வென்றுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகப்பெரிய அளவில் முதிர்ச்சி அடைந்திருக்கிறார். அவர் ஓய்வு பெறுவதற்குள் அனைத்து விதமான சாதனைகளையும் முறியடிக்க வாய்ப்பிருப்பதாக நினைக்கிறேன்.

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயமின்றி முழு உடற்தகுதியோடு இருப்பாரானால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைக்க வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

புணே அணியின் கேப்டன் பதவியிலிருந்து எம்.எஸ்.தோனி நீக்கப்பட்டிருப்பது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்துள்ள சேவாக், "அது மிக வேதனையான முடிவு. அவர் கேப்டனாக இல்லாததால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இனி புணே அணியை எங்களுடைய பஞ்சாப் அணி வீழ்த்த முடியும்.

அவர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது புணே அணியின் உள் விவாகரம். எனினும் இந்திய கேப்டன்களில் தோனியே தலைசிறந்தவர்' என தெரிவித்து உள்ளார்.