வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ராயுடு சதத்தை கடப்பதற்காக ரிஸ்க் எடுத்து ரன் ஓடிய தோனிக்கு கையில் அடிபட்டது. ஆனால் ராயுடுவின் சதத்திற்காக அந்த ரிஸ்க்கை எடுத்தார் தோனி.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் ராயுடுவின் அபார சதத்தால் இந்திய அணி 377 ரன்களை குவித்தது. 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு, குறிப்பாக 4ம் வரிசையில் நீடித்துவந்த சிக்கலுக்கு ராயுடு தீர்வாக அமைந்துள்ளார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடி அந்த இடத்தை பிடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ள ராயுடு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சதத்தை தவறவிட்டார். ஆனால் நான்காவது போட்டியில் சிறப்பாக ஆடிய ராயுடு சதமடித்தார். 

அவர் சதமடிக்க வேண்டும் என்பதில் அவருக்கு நிகராக தோனியும் ஆர்வமாக இருந்தார். ராயுடு 47வது ஓவரில் சதமடித்தார். அந்த ஓவரை கீமோ பால் வீசினார். ராயுடு 99 ரன்கள் இருந்தபோது கீமோ பால் வீசிய பந்தை ராயுடு தடுத்து ஆடினார். அந்த பந்து பேக்வார்டு பாயிண்ட்டில் ஸ்டம்பிற்கு அருகே தான் கிடந்தது. எனினும் ராயுடு சதத்தை கடப்பதற்காக டேஞ்ஜர் எண்டை நோக்கி ரிஸ்க் எடுத்து ஓடினார் தோனி.

அப்போது ஃபீல்டர் பந்தை பிடித்து ரன் அவுட் செய்வதற்காக எறிய, அது நேரடியாக தோனியின் கையை பதம்பார்த்தது. ஆனால் அதனால் தோனிக்கு பெரிய பாதிப்பில்லை. ஆனால் தனது விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் ரிஸ்க் எடுத்து ராயுடுவுக்காக தோனி ரன் ஓடினார். இதுதான் தோனி என அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.