1983ம் ஆண்டுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து தோனி தலைமையிலான இந்திய அணி, 2011 உலக கோப்பையை வென்று அசத்தியது. இறுதி போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. இந்த போட்டியை அவ்வளவு எளிதாக கிரிக்கெட் ரசிகர்களால் மறந்துவிட முடியாது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே நடையை கட்ட, சச்சினும் 18 ரன்களில் வெளியேற, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு, காம்பீர் - கோலி இணை பொறுப்பாக ஆடி மூன்றாவது விக்கெட்டிற்கு ஓரளவு ரன்களை குவித்தது. பிறகு காம்பீர் மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியில் 3வது விக்கெட்டாக கோலி அவுட்டான பிறகு நல்ல ஃபார்மில் இருந்த யுவராஜ், பேட்டிங் ஆட செல்லாமல், தோனி சென்றார். தோனி சிறப்பாக ஆடி, இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் பலருக்கும் புரியாத புதிராக இருந்த விஷயம், நல்ல ஃபார்மில் இருக்கும் யுவராஜுக்கு முன்னதாக தோனி ஏன் இறங்கினார் என்பதுதான். 

இந்நிலையில், இதுகுறித்து தோனி விளக்கமளித்துள்ளார். நாக்பூரில் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய தோனி, 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் யுவராஜுக்கு முன்னதாக தான் களமிறங்கியது குறித்து விளக்கமளித்தார். 

இதுகுறித்து பேசிய தோனி, அந்த சமயத்தில் இலங்கை அணியில் இருந்த பெரும்பாலான பவுலர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடியவர்கள். குறிப்பாக முரளிதரன் சிஎஸ்கே அணியில் ஆடியவர். அந்தநேரம் முரளிதரன் பந்துவீசி கொண்டிருந்ததால் யுவராஜுக்கு முன்பு நான் இறங்கினேன். சிஎஸ்கே அணியில் ஆடும்போது, வலைப்பயிற்சியில் முரளிதரனின் பவுலிங்கை அதிகமாக ஆடியுள்ளேன். எனவே அவரது பவுலிங்கை சிறப்பாக ஆடி என்னால் ரன்கள் எடுக்க முடியும் என்று உறுதியாக நம்பினேன். அதனால்தான் யுவராஜுக்கு முன்பாக நான் இறங்கினேன் என்று தோனி விளக்கமளித்துள்ளார்.