இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதற்கான காரணத்தை தோனி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர். இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று சர்வதேச தொடர்களையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் தோனி தான்.

ஒரு வீரராக மட்டுமல்லாமல் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்கு பல வெற்றிகளையும் பெருமைகளையும் பெற்று கொடுத்தவர் தோனி. தோனியின் கள வியூகம், வீரர்களை பயன்படுத்தும் விதம், எந்த சூழலிலும் பதற்றப்படாமல் நிதானமாக செயல்படும் திறன் ஆகியவை அவரது தலைமைத்துவத்தின் சிறப்புகள். தனது நிதானத்தால் “கேப்டன் கூல்” என அழைக்கப்படுபவர் தோனி. 

தோனி கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால், அதுமுதல் கோலி டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டுவருகிறார். அதேபோல் கடந்த 2017ம் ஆண்டு தோனி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து தீடீரென விலகினார். இதையடுத்து கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கோலி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 

கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் சில அதுதொடர்பாக பரவிய தகவல்களை பற்றியெல்லாம் தோனி கண்டுகொள்ளவில்லை. நாளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசிய கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியாவிற்கான முதல் போட்டி 18ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ் ஆடுகிறது. 

அதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு புறப்படுவதற்கு முன்னதாக தனது சொந்த ஊரான ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, 2019ம் ஆண்டு நடக்கும் உலக கோப்பைக்கு வலுவான அணியை உருவாக்குவதற்கு புதிய கேப்டனுக்கு போதிய அவகாசம் தேவை. அதனால் தான் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன். புதிய கேப்டனுக்கு தேவையான அவகாசத்தை வழங்காமல் வலுவான அணியை உருவாக்குவது சாத்தியமற்ற விஷயம். அதனால் தான் சரியான நேரத்தில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன். இது அணியின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என தோனி தெரிவித்தார். 

எப்படியும் தனக்கு அடுத்து கேப்டன் பொறுப்பு கோலிக்குத்தான் செல்லும் என்பது தோனிக்கு தெரியும். எனவே 2019 உலக கோப்பைக்கு வலுவான அணியை கோலி உருவாக்குவதற்கு போதிய அவகாசம் வழங்கும் விதமாகவே தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். 2011 உலக கோப்பைக்கான அணியை உருவாக்கும் பணியை அப்போதைய கேப்டனாக இருந்த தோனி, 2008ம் ஆண்டே தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல அடுத்த கேப்டனுக்கும் அந்த கால அவகாசம் தேவை என்பதை உணர்ந்தே தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.