ஐபிஎல் கோப்பையை மூன்றாவது முறையாக வென்று தோனி தலைமையிலான சென்னை அணி அசத்தியுள்ளது.

ஐபிஎல் 11வது சீசன் கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில், சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சனின் அதிரடியான சதத்தால், 18.3 ஓவரிலேயே இலக்கை எட்டி சென்னை அணி அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

2010, 2011 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. 

பொதுவாக தோனி அதிர்ஷ்டக்காரர் என்ற கருத்து பரவலாக பேசப்படுவதுண்டு. அதிர்ஷ்டம் என்று கூறுபவர்களின் கருத்தை ஒருபுறம் வைத்துக்கொண்டாலும், தோனியின் திறமை, அணுகுமுறை, கேப்டன்சி திறன் மற்றும் ஒட்டுமொத்த அணியின் கடின உழைப்பு ஆகியவை இல்லாமல் எந்தவொரு வெற்றியும் சாத்தியமில்லை.

அந்தவகையில், இந்த ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வென்றிருப்பது குறித்தும் சில கருத்துகள் பேசப்பட்டன. போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, அதுபோன்ற கருத்துக்களுக்கு பதிலளித்தார்.

போட்டிக்கு பின்னர் பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, நிறைய பேர் எண்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய தேதி 27, என் ஜெர்சி எண் 7, இது எங்களுக்கு 7வது ஃபைனல் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் நாங்கள் இந்த கோப்பையை வெல்வதற்கு போதுமான காரணங்கள் இருக்கின்றன. அதனால் மற்றவை எல்லாம் ஒரு விஷயமே அல்ல என தோனி தெரிவித்தார்.

கோப்பையை வெல்வதற்கு தகுதி வாய்ந்த திறமையான அணி தான் சென்னை அணி என்றும் அதற்காக கடினமான உழைப்பை கொடுத்துத்தான் வென்றிருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் தோனி இவ்வாறு பேசினார்.