ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை வீழ்த்தி ஏற்கனவே இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த தொடரில் இதுவரை ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

ரோஹித், தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகியோர் ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக ராகுல், மனீஷ் பாண்டே, தீபக் சாஹர், கலீல் அகமது, சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். கேப்டன் ரோஹித்தும் துணை கேப்டன் தவானும் இல்லாததால் கேப்டன்சியை தோனி கவனித்துக்கொண்டார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 252 ரன்களை எடுத்தது. 253 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி டிரா செய்தது. 2 பந்துகளில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஜடேஜா தூக்கி அடித்து அவுட்டானார். இதையடுத்து போட்டி டிரா ஆனது. 

போட்டிக்கு பின்  பேசிய கேப்டன் தோனி, ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆட்டத்தை பாராட்டினார். அந்த அணியின் ஆட்டத்திறன் மேம்பட்டிப்பதை மெச்சினார். மேலும் இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்கவில்லை என்பதை வெற்றி பெற முடியாததற்கு ஒரு காரணமாக குறிப்பிட்டார். ஆஃப்கானிஸ்தானை வீழ்த்த இந்த அணி போதும் என்ற எண்ணத்தில்தான் அணி தேர்வு இருந்தது. அப்படியிருக்கையில், அந்த அணியை வைத்து வீழ்த்தியிருக்க வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் அதை காரணமாக குறிப்பிடக்கூடாது. இதை மற்ற கேப்டன்கள் செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால் அனுபவ கேப்டன் அதை காரணமாக குறிப்பிட்டது ஆச்சரியம்தான்.