dhoni is eager to enjoy in chennai with ipl cup

ஐபிஎல் கோப்பையை மூன்றாவது முறையாக வென்று தோனி தலைமையிலான சென்னை அணி அசத்தியுள்ளது.

ஐபிஎல் 11வது சீசன் கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில், சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சனின் அதிரடியான சதத்தால், 18.3 ஓவரிலேயே இலக்கை எட்டி சென்னை அணி அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

2010, 2011 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. 

போட்டிக்கு பின்னர் பேசிய சென்னை கேப்டன் தோனி, இப்போதைக்கு கொண்டாட்டம் குறித்த எந்த திட்டமும் இல்லை. சென்னைக்கு செல்கிறோம். போட்டியின் முடிவு எதுவாக இருந்திருந்தாலும் சென்னைக்கு சென்று ரசிகர்களையும் அணிக்கு நெருக்கமானவர்களையும் சந்திக்க வேண்டும். விடுதி ஒன்றில் தங்கியிருந்து அனைவரும் ஒன்றிணைந்து மாலைப்பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்க இருக்கிறோம் என தோனி தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணி, கோப்பையை வென்றிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போட்டிகள் சென்னையில் நடக்காததால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்திருந்தாலும் இந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.