ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனியை இளம் ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவ் டென்ஷனாக்கி வாங்கிக்கட்டி கொண்டுள்ளார்.

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை வீழ்த்தி ஏற்கனவே இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த தொடரில் இதுவரை ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

ரோஹித், தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகியோர் ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக ராகுல், மனீஷ் பாண்டே, தீபக் சாஹர், கலீல் அகமது, சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். கேப்டன் ரோஹித்தும் துணை கேப்டன் தவானும் இல்லாததால் கேப்டன்சியை தோனி கவனித்துக்கொண்டார்.

இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, குல்தீப் யாதவ் பவுலிங் போடப்போகிற சமயத்தில் ஏற்கனவே தோனி ஃபீல்டிங்கை நிறுத்திவிட, ஆனால் ஃபீல்டிங்கில் மாற்றங்கள் செய்யக்கோரினார் குல்தீப். அப்போது தோனி, பவுலிங் போடுப்பா.. இல்லைனா பவுலரை மாத்திடுவேன் என்று ஹிந்தியில் பேசியது ஸ்டம்ப்பில் இருந்த மைக்கில் பதிவானது.

நெருக்கடியான சூழலிலும் டென்ஷனாகாமல் கூலாக அணுகும் தோனி, கேப்டன் கூல் என்று அழைக்கப்பட்டார். கூல் தோனியையே குல்தீப் டென்ஷனாக்கிவிட்டார். தோனியை குல்தீப் கோபமாக்கியது இது முதன்முறையல்ல. ஏற்கனவே ஒருமுறை இலங்கைக்கு எதிரான போட்டியில் இதேபோல ஃபீல்டிங்கை குல்தீப் மாற்றக்கோரியபோது, கோபமடைந்த தோனி, என்னை பைத்தியக்காரன் என்று நினைத்தாயா? 300 போட்டிகளில் ஆடியிருக்கிறேன் என்று கோபமாக கூறியதாக குல்தீப்பே தெரிவித்திருந்தார்.