dhoni gave up favourite food for fitness

36 வயதை கடந்துவிட்ட தோனி, இன்னும் இளம் வீரர்களுக்கு நிகரான உடற்தகுதியுடன் இருப்பதற்கான ரகசியம் வெளிவந்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணிக்கு மூன்றுவிதமான சாம்பியன்ஷிப்பையும் வென்று கொடுத்தவர். 36 வயதை கடந்துவிட்ட தோனிக்கு அடுத்த மாதம் 7ம் தேதியுடன் 37 வயது நிறைவடைகிறது. 

தோனியின் வயதை சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தாலும், தனது ஆட்டத்திறன், உடற்தகுதி ஆகியவற்றின் மூலம் தொடர்ச்சியாக தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். முன்பு இருந்ததை விட தற்போது தோனியின் உடல் மேலும் கட்டுக்கோப்பாக இருக்கிறது. 

ஐபிஎல் தொடரில் கூட தோனியின் உடலமைப்பு, முன்பை விட நன்றாக இருப்பதை பார்த்திருக்க முடியும். அதற்கு காரணம் உடற்பயிற்சி தான். பொதுவாக விளையாட்டு வீரர்கள் என்றாலே கண்டிப்பாக உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி கொண்டிருந்தபோது உடற்பயிற்சி செய்வதற்கு தோனிக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. 

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு நேரம் சற்று கூடுதலாக கிடைத்ததால், உடற்பயிற்சி செய்துள்ளார். பட்டர் சிக்கன், நான், சாக்லேட்டுகள், மில்க் ஷேக்ஸ் ஆகியவை தோனியின் விருப்பமான உணவுகள். 28 வயது ஆனவுடன் சாக்லேட்டுகள், மில்க் ஷேக்ஸ் ஆகியவற்றை நிறுத்திவிட்டாராம். 

தற்போது ஃபிட்னெஸை தொடர்வதற்காக பட்டர் சிக்கன், நான் ஆகிய உணவுகளையும் தவிர்த்துவிட்டாராம். இத்தகவலை தோனியே கூறியிருக்கிறார். உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு உடற்பயிற்சி 20% தான் உதவும். 80% நமது உணவுமுறை தான் நம்மை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் என்பது தோனியின் கருத்து. 

பிடித்த உணவாக இருந்தாலும் உடற்தகுதிக்கு பாதகமாக இருந்ததால் அவற்றை கைவிட்டதால்தான் தோனியால் 37 வயதிலும்(37 வயது முடிய இன்னும் 20 நாட்கள் தான் உள்ளன) இளம் வீரர்களுக்கு நிகராக உடற்தகுதியுடன் இருக்க முடிகிறது.