இந்திய கேப்டன் விராட் கோலி, தோனி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, வீரர்களின் ஊதிய உயர்வுக்கு பிசிசிஐ ஒப்புக்கொண்டது. அதன்படி, வீரர்களை தரம்பிரித்து அவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போதே தோனியின் தரம் குறைக்கப்படலாம் என தகவல் வெளியானது. 

ஏ+, ஏ, பி, சி என வீரர்கள் தரம்பிரிக்கப்பட்டனர். அதிகபட்சமாக 7 கோடி ஊதியத்திற்கான ஏ+ கிரேடில் கோலி, ரோஹித், தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய 5 வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்த பிரிவில் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனியின் பெயர் இடம்பெறவில்லை.

தோனி, அஸ்வின் உள்ளிட்ட 7 வீரர்கள் 5 கோடி ஊதியத்திற்கான ஏ பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தோனி இரண்டாவது தரத்தில் இடம்பெற்றிருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தன்னை ஏ பிரிவில் சேர்க்குமாறு தோனியே பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் விளையாடும் வீரர்களுக்குத்தான் அதிக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என தோனி கூறிவிட்டாராம்.

தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர் ஏ பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அணியின் சீனியர் வீரரும், மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்கும் உரியவரான தோனி, 36 வயதை எட்டிவிட்ட போதிலும் தற்போதும் அணிக்கு பேட்டிங் மற்றும் கீப்பிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துவருகிறார்.