dhoni and rohit sharma helped me to grow said ishan kishan

தோனி, ரோஹித் ஆகியோர் அளித்த ஊக்கம் தான் தனது சிறப்பான பேட்டிங்கிற்கு காரணம் என மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷான் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 102 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 210 ரன்கள் குவித்தது. மும்பை அணி இந்த ஸ்கோரை எட்ட முக்கிய காரணம் இஷான் கிஷான் தான். மந்தமாக சென்றுகொண்டிருந்த மும்பை அணியின் பேட்டிங்கிற்கு உத்வேகம் அளித்து ரன்ரேட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் இஷான் கிஷான்.

குல்தீப் ஓவரில் அடுத்தடுத்து வரிசையாக 4 சிக்ஸர்கள் விளாசிய இஷான் கிஷான் ஈடன் கார்டனில் சிக்ஸர் மழை பொழிந்தார். 21 பந்துகளில் 62 ரன்கள் குவித்து, ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

போட்டிக்கு பின்னர் பேசிய இஷான் கிஷான், இளம் வீரருக்கு பேட்டிங்கில் முன்வரிசையில் இடம் கிடைப்பது சிறப்பானது. எங்கள் அணியும் கேப்டன் ரோஹித்தும் எனக்கு ஆதரவாக உள்ளனர். எனது பாணியில் ஆட என்னை அனுமதிக்கின்றனர். அணியின் தேவையை உணர்ந்து எந்த வரிசையில் களமிறங்கவும் தயாராகவே உள்ளேன். எனது ஆட்டத்தை மேம்படுத்த தோனியின் அறிவுரைகள் மிகவும் உதவுகின்றன.

அவரை சந்திக்கும்போது எல்லாம் நிறைய டிப்ஸ்களை சொல்வார். களத்தில் நிலைத்து நின்று சூழலை உணர்ந்து எப்படி ஆடுவது என சொல்லி கொடுத்திருக்கிறார். தோனி மற்றும் ரோஹித்தின் அறிவுரைகள் எனது ஆட்டத்திறனை மேம்படுத்த உதவுகின்றன என இஷான் கிஷான் தெரிவித்தார்.

இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவதில் தோனியை போலவே ரோஹித்தும் செயல்படுவதை பல தருணங்களில் களத்தில் பார்க்க முடியும்.