நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், மிகவும் நுணுக்கமான அருமையான ஸ்டம்பிங் ஒன்றை செய்து மிரட்டினார். 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, தொடக்க ஜோடியான ரோஹித் - தவான் அமைத்து கொடுத்த நல்ல அடித்தளத்தால், 50 ஓவர் முடிவில் 324 ரன்களை குவித்தது.

325 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டனர். கடந்த போட்டியை போலவே இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.

கப்டில் 15 ரன்களில் புவனேஷ்வர் குமாரின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் முன்ரோவுடன் ஜோடி சேர்ந்த வில்லியம்சன், ஷமியின் பவுலிங்கில் போல்டாகி 20 ரன்களில் வெளியேறினார். முன்ரோ 31 ரன்களில் சாஹலின் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து நான்காவது விக்கெட்டாக அந்த அணியின் அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிவந்த டெய்லரை, தனது அபாரமான விக்கெட் கீப்பிங் திறமையால் மிகவும் நுணுக்கமாக ஸ்டம்பிங் செய்து அனுப்பினார் தோனி. கேதர் ஜாதவ் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தை ஆடிய டெய்லர், ஃபிரண்ட்ஃபூட் ஆடியபோது, பேலன்ஸ் கிடைக்காமல் லேசாக காலை தூக்கினார். ஆனால் பேலன்ஸுக்காக தூக்கியதால் உடனடியாக கீழே வைத்துவிட்டார். ஆனால் காலைத்தூக்கி மீண்டும் ஊன்றுவதற்கு இடையேயான மிகக்குறைந்த இடைவெளியில் மிகவும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் ஸ்டம்பிங் செய்தார் தோனி. இவ்வளவுக்கும் அவரது கால் கிரீஸை விட்டு வெளியே வரவில்லை. 

இந்த ஸ்டம்பிங்கை மூன்றாவது அம்பயரை ஆய்வு செய்ய கள அம்பயர் பரிந்துரைத்ததை அடுத்து மூன்றாவது அம்பயர் அதை ஆய்வு செய்தார். மிகவும் நுணுக்கமான அந்த ஸ்டம்பிங் மூன்றாவது அம்பயரை உடனடியாக முடிவெடுக்க முடியாமல் செய்தது. நன்றாக ஸூம் செய்து பார்த்து நீண்ட நேர ஆய்விற்கு பிறகு அதை அவுட் என அறிவித்தார் மூன்றாவது அம்பயர். 

தோனி தலைசிறந்த விக்கெட் கீப்பர் தான் என்பது அனைவரும் அறிந்த விஷயமாக இருந்தாலும் கூட, இப்படியான ஸ்டம்பிங்குகள் எல்லாம் சான்ஸே இல்லை. தோனியின் விக்கெட் கீப்பிங்கை மீண்டும் ஒருமுறை பறைசாற்றும் விதமாக இந்த ஸ்டம்பிங் அமைந்தது.