இந்தியாவின் முன்னாள் முதல் நிலை (ஒற்றையர் பிரிவு) டென்னிஸ் வீரரான சோம்தேவ் தேவ்வர்மன் தொடர் காயத்தால் அவதிப்பட்டுள்ளதால், தொழில்முறை டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்ததாக அவர் பயிற்சியாளர் பணியை மேற்கொள்வார் என தெரிகிறது.

இது தொடர்பாக அவர் தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், "தொழில்முறை டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்ற அறிவிப்போடு 2017-ஆம் ஆண்டை தொடங்குகிறேன். கடந்த பல ஆண்டுகளாக என் மீது அன்பு செலுத்தியவர்களுக்கும், எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.

31 வயதான சோம்தேவுக்கு 2012-இல் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவர் சில காலம் மட்டுமே டென்னிஸ் விளையாடினார். அதன்பிறகு எந்த காரணமும் இன்றி சர்வதேச போட்டிகளிலிருந்து விலகியிருந்த சோம்தேவ், இப்போது தொழில்முறை டென்னிஸிலிருந்து பிரியா விடை பெற்றுள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த ஒற்றையர் பிரிவு டென்னிஸ் வீரரான சோம்தேவ், 14 டேவிஸ் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர், 2009-இல் சென்னை ஓபனிலும், 2011-இல் தென் ஆப்பிரிக்க ஓபனிலும் இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளார். 2010-இல் சீனாவின் குவாங்ஜெü நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் என பிரிவுகளிலும் சோம்தேவ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

2008-இல் நடைபெற்ற என்சிஏஏ ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சோம்தேவ் 45 ஆட்டங்களில் விளையாடி, 44-இல் வெற்றிக் கண்டுள்ளார். இன்றளவிலும் அது முறியடிக்கப்படவில்லை.

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் 2-ஆவது பெரிய விருதான அர்ஜுனா விருது சோம்தேவுக்கு 2011-இல் வழங்கப்பட்டது.