இந்திய ஈட்டி எறிதல் வீரர் தேவிந்தர் சிங் காங் ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்ததால் நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளார்.

தேவிந்தரின் ஊக்கமருந்து விவகாரத்தை கண்டறிந்துள்ள ஏஐயு அமைப்பானது, தடகள சம்மேளனங்களுக்கான சர்வதேச சங்கத்தின் தனி சுதந்திரம் படைத்த அங்கமாக கடந்த ஆண்டு ஏப்ரலில் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த அமைப்பால் இந்திய வீரர் ஒருவர் ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டறியப்படுவது இது முதல் முறையாகும்.

கடந்த ஆண்டு மே மாதம் இந்திய கிராண்ட் ஃப்ரீ போட்டியில் பங்கேற்றிருந்த தேவிந்தரின் சிறுநீர் மாதிரியின் மூலமாக, அவர் மாரிஜுனா என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. எனினும், தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு அதிகாரிகள் (நாடா) அவருக்கு தடை விதிக்காதிருந்தனர்.

அந்த ஆண்டு இலண்டனில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற தேவிந்தர், இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

கடந்த ஆண்டு நவம்பரில் பாட்டியாலாவில் இருந்த தேவிந்தர் சிங் (29), தடகள சம்மேளனங்களுக்கான சர்வதேச சங்கத்தின் (ஐஏஏஎஃப்) ஓர் அங்கமான 'ஏஐயு' அமைப்பின் அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்தனர்.

அதில் சோதனை செய்தபோது, 'அனபாலிக் ஸ்டிராய்ட' வகை ஊக்கமருந்தை தேவிந்தர் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேவிந்தர் தனது 'பி' மாதிரியில் பரிசோதனை நடத்த விரும்பினால், மார்ச் முதல் வாரத்துக்குள்ளாக அவர் மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் (நாடா) ஊக்கமருந்து தடுப்பு ஒழுங்கு நடவடிக்கைக் குழு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததை அடுத்து, பாட்டியாலாவில் நடைபெறவுள்ள இந்திய கிராண்ட் ஃப்ரீ தடகள போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவிலிருந்து தேவிந்தரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.