உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவிந்தர் சிங் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

பதினாறாவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஈட்டி எறிதலில் 'பி' பிரிவிலிருந்து தகுதிச்சுற்றில் பங்கேற்ற தேவிந்தர் சிங், தனது முதல் வாய்ப்பில் 82.22 மீ. தூரமும், 2-வது வாய்ப்பில் 82.14 மீ. தூரமும் ஈட்டி எறிந்தார்.

ஆன்னால், மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் அபாரமாக செயல்பட்ட தேவிந்தர் சிங் 84.22 மீ. தூரம் எறிந்ததன் மூலம் இறுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார்.

ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் 'ஏ' பிரிவிலிருந்து 13 பேரும், 'பி' பிரிவிலிருந்து 7 பேரும் பங்கேற்றனர். அதில் 83 மீ. தூரத்தை எட்டிய அனைவரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவர்களில் தேவிந்தர் சிங்கிற்கு 7-வது இடம் கிடைத்தது. ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்று இன்று நள்ளிரவு நடைபெறுகிறது.

அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி வீரரான நீரஜ் சோப்ரா தகுதிச் சுற்றோடு வெளியேறினார். இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதற்கு 83 மீ. தூரம் தகுதி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நீரஜ் சோப்ராவால் அதிகபட்சமாக 82.26 மீ. தூரம் மட்டுமே ஈட்டி எறிய முடிந்தது. அதனால் அவர் தகுதிச்சுற்றோடு வெளியேறியது ஏமாற்றத்தை அளித்தார்.