Delhi to hold the Play Off offer to bring down Gujarat

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42-ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி வெற்றிப் பெற்றதன் மூலம் பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது டெல்லி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42-ஆவது லீக் ஆட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த குஜராத் அணியில் பிரென்டன் மெக்கல்லம் 1 ஓட்டத்திலும், டுவைன் ஸ்மித் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து தடுமாறியது குஜராத்.

இதையடுத்து கேப்டன் சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக். 3 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஷ்ரேயஸ் ஐயர் கோட்டைவிட்ட கேட்ச்சால் வாழ்வு பெற்ற ரெய்னா, ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விளாசி ரபாடா வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரை விரட்டினார்.

மறுமுனையில் தினேஷ் கார்த்திக்கும் அதிரடியில் இறங்க, குஜராத்தின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 40 ஓட்டங்களில் இருந்தபோது 2-ஆவது முறையாக ஆட்டமிழப்பதிலிருந்து தப்பிய ரெய்னா, 32 பந்துகளில் அரை சதம் கண்டார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரெய்னா, சாமுவேல்ஸ் வீசிய 11-ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசினார். இதையடுத்து தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு ஷாபாஸ் நதீம் வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

கோரே ஆண்டர்சன் வீசிய அடுத்த ஓவரில் மேலும் ஒரு சிக்ஸரை விளாசிய தினேஷ் கார்த்திக், 28 பந்துகளில் அரை சதம் கண்டார்.

ரெய்னா 43 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் குவித்தபோது ரன் அவுட்டானார்.

இதையடுத்து ஆரோன் ஃபிஞ்ச் களமிறங்க, மறுமுனையில் வெளுத்து வாங்கிய கார்த்திக், கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆண்டர்சனிடம் கேட்ச் ஆனார். அவர் 34 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர் வந்த இஷன் கிஷான் 4 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். ஆரோன் ஃபிஞ்ச் 19 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 27 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஃபாக்னர் 1 ஓட்டத்தில் வெளியேறினார்.

ஆண்டர்சன் வீசிய கடைசி ஓவரின் கடைசி இரு பந்துகளில் ஜடேஜா இரு பிரமாண்ட சிக்ஸர்களை விளாச, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்கள் குவித்தது குஜராத்.

ஜடேஜா 18 ஓட்டங்களுடனும், சங்வான் 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி தரப்பில் காகிசோ ரபாடா, பட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பேட் செய்த டெல்லி அணியில் கேப்டன் கருண் நாயர் 12 ஓட்டங்களில் வெளியேற, சஞ்சு சாம்சனுடன் இணைந்தார் ரிஷப் பந்த். அவர் வந்த வேகத்தில் சிக்ஸரை விளாச, அதிரடி ஆரம்பமானது.

பிரதீப் சங்வான் வீசிய 5-ஆவது ஓவரில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை பந்த் விளாச, அந்த ஓவரின் முடிவில் 58 ரன்களை எட்டியது டெல்லி. தொடர்ந்து வேகம் காட்டிய பந்த், ரெய்னா பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 27 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். மறுமுனையில் சாம்சன் சிக்ஸர் மழை பொழிய, 10 ஓவர்களில் 113 ஓட்டங்களை எட்டியது டெல்லி.

ஃபாக்னர் வீசிய 11-ஆவது ஓவரில் பந்த் 3 சிக்ஸர்களை விளாச, ஜடேஜா வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்களை விளாசிய சாம்சன் 24 பந்துகளில் அரை சதம் கண்டார்.

டெல்லி அணி 13.2 ஓவர்களில் 167 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது சாம்சன் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 61 ஓட்டங்கள் குவித்தார்.

இதையடுத்து ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்க, மறுமுனையில் வெளுத்து வாங்கிய பந்த் 3 ஓட்டங்களில் சதத்தை நழுவவிட்டார். அவர் 43 பந்துகளில் 97 ஓட்டங்கள் சேர்த்து பாசில் தம்பி பந்துவீச்சில் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார்.

இதையடுத்து களம்புகுந்த ஆண்டர்சன் சிக்ஸரை விளாசி ஆட்டத்தை முடித்தார். இதனால் டெல்லி அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது.

ஷ்ரேயஸ் ஐயர் 14, ஆண்டர்சன் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

குஜராத் தரப்பில் சங்வான், பாசில் தம்பி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.