ஜார்கண்ட் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி அணி, விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 20ம் தேதியுடன் விஜய் ஹசாரே தொடர் முடிவடைகிறது. முதல் அரையிறுதியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

இந்நிலையில் டெல்லி மற்றும் ஜார்கண்ட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி பெங்களூருவில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் கவுதம் காம்பீர், பவுலிங் தேர்வு செய்ததால், ஜார்கண்ட் அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

ஜார்கண்ட் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான இஷான் கிஷான், முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக, அதைத்தொடர்ந்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்து, 85 ரன்களுக்கேஎ ஜார்கண்ட் அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விராட் சிங், நதீமுடன் இணைந்து அணியை மீட்டெடுத்தார். 

ஆனால் நதீம் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். நெருக்கடியான சூழலில் சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்து அணியை மீட்டெடுத்தார் விராட் சிங். ஒருமுனையில் விராட் சிங் பொறுப்புடன் பேட்டிங் ஆட, மறுமுனையில் கடைசி வரிசை வீரர்களான வருண் ஆரோன், சுக்லா ஆகியோர் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 71 ரன்கள் குவித்த விராட் சிங், கடைசி விக்கெட்டாக அவுட்டானார். இதையடுத்து ஜார்கண்ட் அணி, 48.5 ஓவருக்கு 199 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 200 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, உன்முக்த் சந்த், துருவ் ஷோரே, காம்பீர், ஹிம்மத் சிங், நிதிஷ் ராணா ஆகியோரின் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது. அடித்தது குறைந்த ஸ்கோராக இருந்தாலும், ஜார்கண்ட் பவுலர்கள் டெல்லி அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். 

38 ஓவருக்கு 149 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது டெல்லி அணி. போட்டி ஜார்கண்ட் அணியின் பக்கமே இருந்தது. ஆனால் ஜார்கண்ட் அணியின் நம்பிக்கையை பவன் நேகி சிதைத்தார். பொறுப்பாக ஆடிய பவன் நேகி, நிதானமாக ஆடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ரன்களை சேர்த்தார். 9வது விக்கெட்டுக்கு பவன் நேகியுடன் ஜோடி சேர்ந்த நவ்தீப் சைனி, விக்கெட்டை பறிகொடுக்காமல் பொறுப்பாக ஆடி நேகிக்கு சப்போர்ட் செய்தார். 

இந்த ஜோடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் கடைசி வரை போராடி அணியை வெற்றி பெற செய்தது. அதேநேரத்தில் ஜார்கண்ட் அணியின் பவுலர்களும் டெல்லி அணிக்கு அவ்வளவு எளிதாக வெற்றியை பரிசளித்துவிடவில்லை. கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்து சென்றனர். கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 4 பந்துகளில் அந்த ரன்னை எடுத்து அணியை வெற்றி பெற செய்தார் பவன் நேகி. பவன் நேகி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து டெல்லி அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள காம்பீர் தலைமையிலான டெல்லி அணி, இறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்கிறது.