கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கவுதம் காம்பீரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி விடுவித்துள்ளது. 

இதுவரை 11 ஐபிஎல் சீசன்கள் முடிந்துள்ள நிலையில், ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத மூன்று அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் ஒன்று. டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய மூன்று அணிகளும் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. 

எனவே அடுத்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த 3 அணிகளும் தீவிரமாக உள்ளன. அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடக்க இருப்பதால் அனைத்து அணிகளும் தாங்கள் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. டெல்லி டேர்டெவில்ஸை தவிர மற்ற அணிகள் விடுவித்த மற்றும் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை பார்த்தோம். இப்போது டெல்லி டேர்டெவில்ஸ் விடுவித்த மற்றும் தக்கவைத்துள்ள வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கவுதம் காம்பீர், கடந்த சீசனில் டெல்லி அணிக்காக ஆடினார். டெல்லி அணியின் கேப்டனாக இருந்த காம்பீர், கடந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்ததால் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டும்தான் விலகினார். ஆனால் அவரை அப்படியே ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டியது அந்த அணி. தொடக்க வீரராக அவரது இடத்தை பிரித்வி ஷா நிரப்பிவிட அப்படியே ஒதுக்கப்பட்டார் காம்பீர். இந்நிலையில், அடுத்த சீசனில் டெல்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் காம்பீர். கேகேஆர் அணிக்கு இரண்டு முறை கோப்பையை வென்றுகொடுத்த காம்பீர், இன்றைக்கு தக்கவைக்கக்கூட தகுதியில்லாத வீரராகிவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

சன்ரைசர்ஸ் அணியிடமிருந்து ஷிகர் தவானை பெற்ற டெல்லி அணி அவருக்கு பதிலாக விஜய் சங்கர், நதீம், அபிஷேக் ஆகிய மூவரையும் அந்த அணிக்கு கொடுத்துள்ளது. 

மேலும் இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல், முகமது ஷமி, பிளங்கெட், ஜூனியர் டாலா, நமன் ஓஜா, டான் கிறிஸ்டியன், குருகிரீத் மான் ஆகியோரையும் விடுவித்துள்ளது. 

டெல்லி டேர்டெவில்ஸ் தக்கவைத்த வீரர்கள்:

ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், கோலின் முன்ரோ, கிறிஸ் மோரிஸ், மஞ்ஜோத் கல்ரா, ஜெயந்த் யாதவ், ராகுல் திவேஷியா, ஹர்சல் படேல், அமித் மிஷ்ரா, ரபாடா, டிரெண்ட் போல்ட், சந்தீப் லாமிசானே, ஆவேஷ் கான்.