புதுடெல்லி,
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் டெல்லி – புனே இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிரா செய்யப்பட்டது.
எட்டு அணிகள் இடையிலான 3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் டெல்லி நேரு அரங்கத்தில் வியாழக்கிழமை இரவு அரங்கேறிய 24–வது லீக்கில் டெல்லி டைனமோசும், புனே சிட்டியும் சந்தித்தன. உள்ளூர் இரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த டெல்லி ஆரம்பத்தில் இருந்தே தாக்குதல் பாணியை கையாண்டனர். பந்து இவர்கள் வசமே (60 சதவீதம்) சுற்றிக்கொண்டிருந்தது. ஆனால் அதிர்ஷ்டம் என்னவோ புனே அணிக்கு இருந்தது. 45–வது நிமிடத்தில் புனே அணியின் ராகுல் பெகே தட்டிக்கொடுத்த பந்தை, சக வீரர் ரோட்ரிகஸ் டாட்டோ தலையால் முட்டி கோலாக்கினார்.
பிற்பாதியில் மேலும் ஆக்ரோஷமாக செயல்பட்ட டெல்லி அணி 79–வது நிமிடத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பில் பதிலடி கொடுத்தது. பிரீகிக்கில் மார்செலோ பெரீரோ தட்டிக்கொடுத்த பந்தை, டெல்லி வீரர் மிலன்சிங் எதிரணியின் தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி வலைக்குள் அனுப்பினார்.
இதன் பிறகு டெல்லிக்கு மேலும் சில கோல் வாய்ப்புகள் உருவாகின. ஆனால் புனே அணியின் கோல் கீப்பர் ஈடெல் பீட் (அர்மேனியா நாட்டவர்) அரண் போல் நின்று தடுத்து நிறுத்தினார்.
4–5 கோல் ஷாட்டுகளை பாய்ந்து விழுந்து பிரமாதமாக முறியடித்து வியப்பூட்டிய அவர் தான் ஆட்டத்தின் ‘ஹீரோ’வாக விளங்கினார். முடிவில் இந்த ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. நடப்பு சீசனில் டிரா ஆன 9–வது ஆட்டம் இதுவாகும்.
இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைனெட் (கவுகாத்தி) – அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
