திட்டமிட்டபடி சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி நடந்தே தீரும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னைக்காக தமிழகமே போராடி கொண்டிருக்கும்போது, ஐபிஎல் போட்டி சென்னையில் நடத்தப்படக்கூடாது என்ற குரல் வலுத்துள்ளது.

அரசியல் கட்சிகள், அமைப்புகள், சினிமா துறையினர் என பல தரப்பினரும் சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அதையும் மீறி போட்டி நடத்தப்பட்டால் மைதானத்தை முற்றுகையிடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

அதே கருத்தை இயக்குநர் பாரதிராஜா தலைமையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

ஐபிஎல் போட்டியை புறக்கணித்தால் மைதானமே காலியாக இருக்கும். அதை உலகமே பார்க்கும். அதன்மூலமாக தமிழக மக்களின் உணர்வுகளையும் வலிமையையும் வலியையும் உலகமே திரும்பி பார்க்கும். எனவே அந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

இதையெல்லாம் விட ஒருபடி மேலேபோய், சென்னை வீரர்கள் வெளியே செல்லும்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என தமிழக வாழுவுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

அதேபோல, மைதானத்தில் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என சீமானும் எச்சரித்துள்ளார்.

இவ்வாறு சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், திட்டமிட்டபடி நாளை சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தே தீரும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு போட்டி நடத்தப்படும். அரசியலுக்குள் ஐபிஎல்லை இழுக்கக்கூடாது என ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.