இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியமான தொடர். டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக திகழ்ந்தாலும் தொடர்ந்து வெளிநாடுகளில் தோல்வியை தழுவிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று தங்கள் பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றிருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

அதேநேரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் சிதைந்து போயிருக்கும் ஆஸ்திரேலிய அணி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. எனவே தொடர் தோல்விகளிலிருந்தும் சரிவிலிருந்தும் மீண்டு இந்திய அணியை வீழ்த்தி மீண்டும் பலம்பெறும் தீவிரத்தில் உள்ளது. 

ஸ்மித்தும் வார்னரும் ஆஸ்திரேலிய அணியில் இல்லாததாலும் இந்திய அணி அனைத்து வகையிலும் வலுவாக திகழ்வதாலும் இந்த தொடரை இந்திய அணி தான் வெல்லும் பெரும்பாலான முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ஸ்மித்தும் வார்னரும் இல்லாததால் ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்று இயன் சேப்பல், ரிக்கி பாண்டிங் ஆகிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ், ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை பலவீனமான அணியாகவே பார்க்கிறேன். வலுவான இந்திய அணியை வீழ்த்தும் அளவிற்கு தற்போதைய ஆஸ்திரேலிய அணியை திறமை வாய்ந்த அணியாக கருதவில்லை. ஸ்மித்தும் வார்னரும் ஆஸ்திரேலிய அணியின் ரன்களில் 40% பங்களிப்பை அளித்துவிடுவர். அப்படியான வீரர்கள் யாரும் இப்போது இல்லை. எனவே ஸ்மித்தும் வார்னரும் இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொடரை வெல்லாவிட்டால் இனிமேல் இந்திய அணியால் எப்போதுமே ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல முடியாது. ஆனால் இந்திய அணி 2-0 அல்லது 3-0 என தொடரை வெல்லும் என்று நம்புகிறேன் என்று டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.