டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து விலகினார் இந்தியாவின் முன்னணி வீரரான யூகி பாம்ப்ரி. காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய 2 நாள்களும் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இந்தப் போட்டியில் தன்னால் பங்கேற்க இயலாது என்று அகில இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு யூகி பாம்ப்ரி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "தோள் பட்டை வலி மற்றும் அடிவயிறில் திசு ஒன்று கிழிந்திருப்பதால் 10 நாள்கள் டென்னிஸ் போட்டிகளில் விளையாடக் கூடாது என்று இயன்முறை சிகிச்சை நிபுணர் ஆலோசனை வழங்கியுள்ளார்" என்று பாம்ப்ரி குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, அவருக்கு பதிலாக சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 246-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரஜ்னேஷை தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.

ஒற்றையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல் ஆகிய வீரர்களும் இந்தியா சார்பில் விளையாடவுள்ளனர். இரட்டையர் பிரிவில் மூத்த வீரர்கள் ரோஹன் போபண்ணா, லியாண்டர் பயஸ் ஆகியோர் இந்தியாவின் சார்பில் பங்கேற்கின்றனர்.

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்றுடன் யூகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.