3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 

முதலில் டெஸ்ட் தொடர் நடக்கிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் நாளையே முழுதாக முடிக்காமல் வெறும் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலிவியர் 6 விக்கெட்டுகளையும் ரபாடா 3 விக்கெட்டுகளையும் டேல் ஸ்டெயின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தென்னாப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆலிவியர் முதன்முறையாக 5 விக்கெட்டுகளை இந்த போட்டியில் வீழ்த்தியுள்ளார். 

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமானின் விக்கெட்டை மட்டும் ஸ்டெயின் வீழ்த்தினார். இது ஸ்டெயினின் 422வது டெஸ்ட் விக்கெட்டாகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்க பவுலர் என்ற சாதனையை ஸ்டெயின் படைத்துள்ளார். இந்த பட்டியலில் 421 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஷான் போலாக்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் ஸ்டெயின். 

89 போட்டிகளில் ஆடி 422 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஸ்டெயின். சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் ஸ்டெயின் 11வது இடத்தில் உள்ளார்.