மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா அரையிறுதியில் கால்பதித்தார்.

டபிள்யூடிஏ பைனல்ஸ் என்றழைக்கப்படும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.

இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசிச் சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனையான அக்னீஸ்கா 7-5, 6-3 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதியை உறுதி செய்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் ஸ்வெட்லானா 6-3, 0-6, 1-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவிடம் தோல்வி கண்டார். இந்தத் தொடரில் ஸ்வெட்லானா சந்தித்த முதல் தோல்வி இது.

எனினும் அவர் ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டதால் இந்தத் தோல்வியால் எந்த பாதிப்பும் இல்லை.

சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை சந்திக்கிறார் அக்னீஸ்கா. மற்றொரு அரையிறுதியில் ஸ்வெட்லானாவும், ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவாவும் மோதுகின்றனர்.