csk should win this ipl for dhoni says raina

இந்த முறை தோனிக்காக ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வென்றே தீர வேண்டும் என சென்னை அனி வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடங்கியதிலிருந்து வெற்றிகரமான அணியாக வலம்வருவது சென்னை அணி. 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது. 2008 முதல் 2015 வரை சென்னை அணி ஆடியது. அதன்பிறகு 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளும் சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாக 8 சீசன்களில் ஆடிய சென்னை அணி, 6 முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அவற்றில் இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியது. 4 முறை இறுதி போட்டியில் தோற்று கோப்பையை தவறவிட்டது. 

தோனி தலைமையிலான சென்னை அணி, ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக வலம்வருகிறது. இரண்டு ஆண்டுகால தடைக்கு பின் தோனி தலைமையில் இந்த சீசனில் மீண்டும் களமிறங்கியதால், சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கியபோதும் சிறப்பாக ஆடி பிளே ஆஃபிற்கு தகுதி பெற்ற சென்னை அணி, முதல் தகுதி சுற்று போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது தோனி தலைமையிலான சென்னை அணி.

இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா, 2008லிருந்து சென்னை அணிக்காக கேப்டனாகவும் சிறந்த ஃபினிஷராகவும் அரிய பங்காற்றியிருக்கிறார் கேப்டன் தோனி. அவர் ஒரு சிறந்த மனிதர். ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதும் தோனி உணர்ச்சிவயப்பட்டார். தோனி மீதான விமர்சனங்கள் எழும்போதெல்லாம், தனது திறமையால் களத்தில் பதில் சொல்லி தன்னை நிரூபித்துவருகிறார் தோனி. இந்த முறை தோனிக்காக ஐபிஎல் கோப்பையை நாங்கள் வெல்ல வேண்டும் என ரெய்னா தெரிவித்தார்.