csk ceo revealed the fact that how dhoni handled watson
வாட்சன் முழு உடற்தகுதியுடன் இல்லாமல் இருந்ததால், அவரை சென்னை அணியின் கேப்டன் தோனி மிகவும் கவனமாக கையாண்டதாக அந்த அணியின் சி.இ.ஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு ஐபிஎல் 11வது சீசனில் தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த சீசனில் சென்னை அணியின் கேப்டன் தோனி, வாட்சன், ராயுடு, ரெய்னா ஆகியோர் நல்ல ஃபார்மில் இருந்தனர்.
அதிலும் இந்த சீசன் முழுவதும் சென்னை அணிக்கு வாட்சன் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். இறுதி போட்டியிலும் தனி ஒருவராக நின்று சதமடித்து சென்னை அணிக்கு கோப்பையை உறுதி செய்தார். சென்னை அணியில் தோனி, வாட்சன், ராயுடு, பிராவோ, ரெய்னா, ஹர்பஜன் சிங், டுபிளெசிஸ் என பெரும்பாலான வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். அதிலும் தோனி, வாட்சன், ஹர்பஜன் ஆகியோர் 35 வயதை கடந்தவர்கள்.

அதனால் உடற்தகுதியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய அணியாக சென்னை அணி திகழ்ந்தது. முதல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக கேதர் ஜாதவ், தொடர் முழுவதிலுமிருந்து விலகினார். அதன்பிறகு ரெய்னாவுக்கு காயம், அடுத்தது தோனிக்கு என பட்டியல் நீண்டுகொண்டே இருந்தது.
முக்கியமான பெரும்பாலான வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள் என்பதால், சென்னை அணி உடற்தகுதியில் மிகுந்த கவனம் செலுத்தியது. வாட்சன் டைவ் அடித்தால் காயமடைய வாய்ப்பு இருக்கிறது என்பதால் அவர் டைவ் அடித்து பந்தை பிடிப்பதை தான் விரும்பவில்லை என தோனியே தெரிவித்திருந்தார்.
ஆனால் ஒருவழியாக சென்னை அணியின் வீரர்கள் முழு உடற்தகுதியுடன் ஆடி, கோப்பையையும் கைப்பற்றிவிட்டனர்.
இந்நிலையில், வாட்சனை தோனி கையாண்ட விதம் குறித்து சென்னை அணியின் சி.இ.ஓ விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள விஸ்வநாதன், இந்த சீசனில் வாட்சன் முழு உடற்தகுதியுடன் இல்லை. எனவே அவரை கேப்டன் தோனியும் அணி நிர்வாகமும் மிகுந்த கவனத்துடன் கையாண்டது. வாட்சனின் ஃபீல்டிங் பொசிசனில் கூட தோனி கவனமாக செயல்பட்டார் என தெரிவித்தார்.
வாட்சனை கவனமாக கையாண்டதால் தான் அவர் பேட்டிங்கில் அசத்தி கோப்பையை வென்று கொடுத்தார். அவரும் காயத்துடன் வெளியேறியிருந்தால், சென்னை அணியின் நிலை சற்று கேள்விக்குறியாகியிருக்கும்.
