Critics will respect the opinions of others - Dhoni response to those who criticize him ......

வாழ்க்கையில் ஒவ்வொருவரும், தங்களுக்கான பார்வையும், கருத்துகளும் கொண்டிருப்பார்கள். அதனை மதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ்.தோனி தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்துள்ளார்.

அஜித் அகர்கர், வி.வி.எஸ்.லஷ்மண் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் தோனியின் தற்போதைய பங்களிப்பு குறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், அந்த விமர்சனங்கள் தொடர்பான கேள்விகளுக்கு துபையில் தனது கிரிக்கெட் அகாடெமி திறப்பு நிகழ்ச்சியின்போது தோனி கூறியது:

"வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு பார்வைக் கோணத்தையும், கருத்துகளையும் கொண்டிருப்பார்கள். அது மதிக்கப்பட வேண்டும். நான் இந்திய அணியில் பங்குவகிப்பது, எனக்கான மிகப்பெரிய ஊக்குவிப்பாக இருக்கிறது.

கிரிக்கெட்டில் இருக்கும் பல முன்னணி வீரர்கள் கடவுளின் ஆசீர்வாதத்தால் முன்னேறியவர்கள் அல்ல. கிரிக்கெட்டை தங்களின் வாழ்க்கை குறிக்கோளாக கொண்ட அவர்கள், தங்களை அதற்காக மெருகேற்றிக் கொண்டனர். அதை பயிற்சியாளர்களும் பரிசோதிக்கின்றனர். நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

எந்த ஒரு விஷயத்தின் முடிவுகளை விடவும் முக்கியமாக அதன் நடைமுறைகள் மீதே நம்பிக்கை வைக்கிறேன். முடிவுகள் குறித்து எப்போதுமே நான் கவலைப்பட்டது இல்லை. சம்பந்தப்பட்ட நேரத்தில் செய்ய வேண்டிய சரியான செயல் எது என்பதை மட்டுமே நான் சிந்திக்கிறேன். களத்தில் ஆடும்போது 10, 14, 5 என எத்தனை ஓட்டங்கள் தேவையிருந்தாலும் இதையே செய்கிறேன்.

எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமல் போனால் என்ன செய்வது? என்ற சுமையை என்னுள் ஏற்றிக்கொண்டதில்லை. செய்ய வேண்டிய நடைமுறைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று தோனி கூறினார்.