இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி, டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக மகேந்திர சிங் தோனி நேற்று திடீரென அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை,2013ம் ஆண்டு ஐ.சி.சி.சாம்பியன் கோப்பை ஆகியவற்றை தோனி பெற்றுத் தந்தார். அது மட்டுமல்லாமல், டெஸ்ட்தரவரிசையில் 18 மாதங்களாக இந்திய அணி இவரின் தலைமையில் முதல் இடத்தில் இருந்தது. 

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்ற நிலையில் ஒருநாள், மற்றும் டி20  போட்டிகளில் மட்டும் கேப்டனாக செயல்பட்டு விளையாடி வந்தார். இந்நிலையில், ஒருநாள், டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் தோனி விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். 

நன்றி

இது தொடர்பாக பி.சி.சி.ஐ. அமைப்பிடம் தனது கேப்டன் பதவி விலகல் குறித்து முறைப்படி தோனி தெரிவித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து  பி.சி.சி.ஐ. அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி கூறுகையில், “ இந்திய கிரிக்கெட்டின் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக பங்களிப்பு செய்த தோனிக்கு, ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர், பி.சி.சி.ஐ. சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன். 

இங்கிலாந்து தொடர்

அவரின் தலைமையில் இந்திய அணி பலவெற்றிகளைக் குவித்து பல சாதனைகள் புரிந்தது. தொடர்ந்து சாதனைகள் புரிய வேண்டும். ஒருநாள், டி20 அணியின்கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் தொடர்வார்'' எனத் தெரிவித்தார்.

ஒரு நாள் போட்டி

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மகேந்திர சிங் தோனி, 2004ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். வங்கதேசம் அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை தொடங்கிய தோனி, 283 ஒருநாள் போட்டியில் விளையாடி 9,110 ரன்னும், 9 சதங்கள், 61 அரைசதங்கள் அடித்துள்ளார்.

டெஸ்ட்

2005ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் கால் பதித்த தோனி, சென்னையில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடினார். 90 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 4,876 ரன்னும், 6 சதமும், 33 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 224 ரன்கள் எடுத்துள்ளார்.

2014ம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு கேப்டனாக தோனி இருந்தார். அந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி பறிகொடுத்ததால் கேப்டன் தோனி மீது விமர்சனங்கள் எழுந்ததையடுத்து டெஸ்ட்போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். 

வெற்றிக் கேப்டன்

வெற்றி கேப்டனாக வளம் வந்த மகேந்திர சிங் தோனி, ஒருநாள் மற்றும் டி20போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனி, 60 டெஸ்ட், 194 ஒருநாள் போட்டிகள், 70 டி20 போட்டிகளில் கேப்டனாகசெயல்பட்டுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றி, ஒருநாள் போட்டியில் 107 வெற்றி, டி20 40 வெற்றிகள் என வெற்றிக் கேப்டனாக வலம் வந்தார்.