ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன், பெங்களூரு அணிக்காக ஆடுகிறார்.

ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை அணி இந்த முறை மீண்டும் களம் காண்கிறது. அதனால் சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முதல் போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதுகின்றன.

இந்த ஐபிஎல் சீசனுக்கான ஏலம் கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சில அதிர்ச்சிகர சம்பவங்கள் நடந்தன. சர்வதேச அளவில் சிறந்த வீரர்களில் சிலரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. கோரி ஆண்டர்சன், கிறிஸ் கெய்ல், ஜோ ரூட், ஜேம்ஸ் ஃபாக்னர் உள்ளிட்ட வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இரண்டாம் கட்ட ஏலத்தில் கிறிஸ் கெய்லை பஞ்சாப் அணி எடுத்தது.

ஆனால் மற்ற வீரர்களை எந்த அணியும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன், பெங்களூரு அணிக்காக ஆட இருக்கிறார். பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் குல்டர் நைல் காயம் காரணமாக ஐபிஎல்லில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே அவருக்கு பதிலாக கோரி ஆண்டர்சன் பெங்களூரு அணிக்காக ஆட இருக்கிறார். இதற்காக கோரி ஆண்டர்சனை அவரது அடிப்படை விலையான 2 கோடிக்கு பெங்களூரு அணி எடுத்துள்ளது.