விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, உலகின் தலைசிறந்த வீரராக திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். இந்திய அணியில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்ட பல சாதனைகளை முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார்.

விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி பேட்டிங்கில் சிறந்து விளங்கியதால் அவர் கிரிக்கெட் ஆட தொடங்கிய சில காலத்திலேயே அதிகமான விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். நிறைய பிராண்டுகளின் மாடலாக இருந்துவருகிறார். 

இந்நிலையில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அறிமுகமாவதாக பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் விராட் கோலி அறிமுகமாகும் ”டிரைலர் - தி மூவி” என உள்ளது. மேலும் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் விராட் கோலி சினிமா துறையில் அறிமுகமாகிறாரா என்ற பேச்சு எழுந்துள்ளது. ஏற்கனவே ஓய்வின்றி தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவருவதால்தான் கோலிக்கு ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

அவர் ஓய்வில்லாமல் கிரிக்கெட் ஆடிவரும் நிலையில், படம் நடிப்பதற்கு ஏது நேரம்..? எனவே அது திரைப்பட போஸ்டராக இருக்காது. அவர் நடிக்கும் புதிய விளம்பரத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கான உத்தியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் அது திரைப்பட போஸ்டரா? விளம்பர போஸ்டரா? என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆனால் கோலி, 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அறிமுகமாவதாக பதிவிட்டுள்ளதால், அது திரைப்படமாக இருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஒருவேளை அது திரைப்படமாக இருந்தால், நாட்டுக்காக கிரிக்கெட் ஆடும் தனது பணியை உதறிவிட்டு, அவ்வப்போது கிரிக்கெட் போட்டிகளில் ஆடாமல், ஓய்வு என்று கூறிவிட்டு திரைப்படத்தில் நடித்தாரா? என்ற கேள்வியும் எழுகிறது.