Competition referees to the first video review experts rose to 2 times the pay incredible ...

போட்டி நடுவர்கள், ஸ்கோர் கணக்கிடுபவர்கள், இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு, விடியோ ஆய்வு நிபுணர்கள் ஆகியோருக்கு 2 மடங்கு ஊதிய உயர்வு என்று பிசிசிஐ தீர்மானித்துள்ளது. 

போட்டி நடுவர்கள், ஸ்கோர் கணக்கிடுபவர்கள், இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு, விடியோ ஆய்வு நிபுணர்கள் ஆகியோருக்கு 2 மடங்கு ஊதிய உயர்வு என்று பிசிசிஐ தீர்மானித்துள்ளது. இதற்கான முடிவை, சபா கரீம் தலைமையிலான பிசிசிஐ கிரிக்கெட் நடவடிக்கைக் குழு மேற்கொண்டுள்ளது. 

இதற்கு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழுவும் (சிஓஏ) ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய நிலையில், தேர்வுக் குழு தலைவருக்கான ஆண்டு ஊதியம் ரூ.80 இலட்சமாகவும், உறுப்பினர்களுக்கான ஆண்டு ஊதியம் ரூ.60 இலட்சமாகவும் உள்ளது. 

ஊதிய உயர்வு எதிர்பார்ப்பின்படி, தேர்வுக் குழு தலைவருக்கான ஊதியம் ரூ.1 கோடி வரையில் அதிகரிக்கப்படலாம். அதேபோல், உறுப்பினர்களுக்கான ஊதியம் ரூ.75 இலட்சம் முதல் ரூ.80 இலட்சம் வரையில் இருக்கலாம்.

இதனிடையே, உள்நாட்டு போட்டி நடுவர்கள், கள நடுவர்கள், ஸ்கோர் கணக்கிடுபவர்கள், விடியோ ஆய்வு நிபுணர்கள் ஆகியோருக்கான போட்டி ஊதியத்தை இரட்டிப்பாக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

மேற்குறிப்பிட்டவர்களுக்கு கடைசியாக, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டிருந்தது. ஊதிய உயர்வின்படி, கள நடுவர்களுக்கு முதல்தர கிரிக்கெட், மூன்று நாள் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. 

தற்போது அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. டி20 போட்டியைப் பொருத்த வரையில் முன்பு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், இனி ரூ.20 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

போட்டி நடுவர்களுக்கான ஊதியம் டி20 ஆட்டம் தவிர இதர போட்டிகளுக்கு ரூ.30 ஆயிரம், டி20 போட்டிகளுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. 

ஸ்கோர் கணக்கிடுபவர்களுக்கான ஊதியம் இதர போட்டிகளுக்கு ஒரு நாளுக்கு ரூ.10 ஆயிரம் டி20 போட்டிக்கு ரூ.5 ஆயிரம் அளிக்கப்படவுள்ளது.

விடியோ ஆய்வு நிபுணர்களுக்கான ஊதியம் டி20 தவிர்த்த போட்டிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.15 ஆயிரம், டி20 போட்டிகளுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.