Commonwealth Wrestling Sushil Kumar Saxi Malik Gold wins
காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் மற்றும் சாக்ஷி மாலிக் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் 74 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் சுஷில் குமார், இறுதிச்சுற்றில் நியூஸிலாந்தின் அகாஷ் குலார்ஸை வீழ்த்தி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
இது, கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச மல்யுத்தத்தில் சுஷில் குமார் வெல்லும் முதல் தங்கமாகும். அந்த ஆண்டில் அவர் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தப் போட்டியில் சுஷில் குமார் தங்கம் வென்ற அதே பிரிவில், இந்தியாவின் பர்வீன் ரானா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
வெற்றிக்குப் பிறகு சுஷில் குமார் டிவிட்டர் பக்கத்தில், "சர்வதேச களத்துக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியுள்ள நிலையில், தங்கம் வென்றுள்ளேன். இது எனக்கு மிகவும் பெருமை மற்றும் உணர்வுப்பூர்வமிக்க தருணமாகும். இந்த தங்கப் பதக்கத்தை எனது தாய்நாட்டிற்கும், பயிற்சியாளருக்கும் சமர்ப்பிக்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.
அதேபோல், இப்போட்டியில் மகளிருக்கான 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் நியூஸிலாந்தின் டெய்லா டுவாஹைன் ஃபோர்டை 13-2 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் பதக்கம் வென்று அசத்தினார்.
